தன்னாலும் சிறப்பாக பந்துவீச முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் தற்போது நடந்து வருகிறது. இந்தத் தொடரில் நாளை நடக்கும் லீக் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியை இந்திய அணி சந்திக்க உள்ளது.
இப்போட்டிக்காக இந்திய வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி அளித்த பேட்டி ஒன்றில்,
‘2017ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஒருநாள் தொடரின்போது, எம்.எஸ்.டோனியிடம் என்னாலும் சிறப்பாக பந்துவீச முடியும், வீசவா? என்று கேட்டேன். அவரும் சரி என்றார். பந்துவீச தயாராகும்போது, பவுண்டரி எல்லையில் இருந்த பும்ரா, இது ஒன்றும் நகைச்சுவை இல்லை, சர்வதேச போட்டி என்று சத்தமாக கூறினார்.
அதில் இருந்து பந்துவீசுவதை நிறுத்திவிட்டேன். அணியில் என் பந்துவீச்சின் மீது யாருக்கும் நம்பிக்கையில்லை. ஆனால், என்னாலும் சிறப்பாக பந்துவீச முடியும்.
ஆரம்பத்தில் டெல்லி கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றபோது, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஸ்டைலை பின் பற்றினேன். பின்னர் அவருடன் விளையாடியபோது, இந்த கதையை கூறியதும் அவர் சிரித்தார்’ என தெரிவித்துள்ளார்.
மித வேகப்பந்து வீச்சாளரான கோஹ்லி, இதுவரை சர்வதேச போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், 2017ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் பந்துவீசாமல், துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.