தங்களுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு தான் தேவையே தவிர, அமெரிக்காவின் மிரட்டலுக்கெல்லாம் அடிபணிய முடியாது என்று சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப் போர் டிரம்ப் ஜனாதிபதி ஆனது முதல் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி பொருட்களுக்கு வரியை அதிகரித்து, கடும் போட்டியில் இறங்கியுள்ளன.

இதுவரை 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், இருதரப்பினரிடையேயும் சமாதானம் ஏற்படுவதாக தெரியவில்லை. இந்நிலையில், அமெரிக்கா மீதான தங்களது நிலைபாடு குறித்து சீனா வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில், ‘அமெரிக்கா கொடுக்கும் எந்த வித அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம். கொள்கைகள் தான் முக்கியம். தங்களுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு தான் தேவையே தவிர மிரட்டலுக்கெல்லாம் அடிபணிய முடியாது.

அமெரிக்க கட்டண திட்டங்களினால் அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சியடைந்து விடவில்லை. மாறாக அது அமெரிக்க பொருளாதாரத்திற்கு சீர்கேட்டைத்தான் ஏற்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தைகளின் போது சீனா ஒப்பந்தங்களில் இருந்து பின் வாங்கியது என்று அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.

ஆனால், சீனாவின் இறையாண்மையை தடுக்கும் விதமாக சில அழுத்தங்களை அமெரிக்கா தொடர்ந்து கொடுத்து வருகிறது. மேலும் சில கட்டணங்கள் ஒப்பந்தத்துக்கு பிறகு தான் என்று மிரட்டும் தொனியில் கூறுகிறது. அதாவது ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை சரிபார்க்க, அமெரிக்காவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது.

இது எப்படி சாத்தியம்? சீனாவின் இறையாண்மை என்ன ஆவது? தொழில்நுட்ப மாற்றுக்கள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை காப்பு ஆகியவை, குறித்த ஒப்பந்த உடன்படிக்கைகளை சீனா எப்படி அமல்படுத்துகிறது என்பதை அமெரிக்கா கவனிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறது.

இதனால்தான் பேச்சுவார்த்தைகளில் தீர்வு ஏற்படுவது கடினமாகிறது. ஒரு நாடு இன்னொரு நாட்டின் இறையாண்மையை மதிக்கவில்லை எனில், சமரசங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் எந்த ஒரு ஒப்பந்தமும் சரிபட்டு வராமல் தான் போகும்.

அனைத்து வகையான தந்திரங்களையும் பயன்படுத்தி அமெரிக்கா, சீனா மீது கடும் அழுத்தங்களைப் பிரயோகித்தால், சீனாவை சரணயடைய வேண்டும் என்று நினைத்தால் அது சாத்தியமே அல்ல’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.