டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசனுக்கும், நபீலாவுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து நடந்த திருமண வரவேற்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இந்நிலையில் டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
என் இளைய மகன் குறளரசனின் திருமணம் பெண் வீட்டில் வைத்து எளிமையாக நடந்தது. இதையடுத்து அவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. என் அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தன்னால் வர முடியாது என்பதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே சொல்லி குறளரசனை அழைத்து வாழ்த்தியதோடு மட்டும் அல்லாமல் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்தை அனுப்பி வைத்தார். நிறைய பேரை அழைக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. அவர்களை அழைத்து பேச உள்ளேன். நானும், ரஜினிகாந்தும் ஆரம்பத்தில் நண்பர்கள். அவருக்கும், எனக்கும் இடையே நட்பு இருந்தது.





நான் பத்திரிகை வைத்தபோது எடுத்த புகைப்படங்களை வைத்து செய்தி வெளியிட்ட ஊடகத் துறையினர் அனைவருக்கும் நன்றி. தற்போது என் கண்கள் கலங்குவதற்கு மகிழ்ச்சி தான் காரணம். நான் சினிமாவில் மட்டும் காதலை ஆதரிப்பவன் அல்ல. நான் மதங்களை பார்ப்பவன் அல்ல... சினிமாவில் மட்டும் சொல்பவன் இல்லை. என் சின்ன பையன் அவன் மனசுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்ய அனுமதித்தேன்.
பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். திருமணம் என்று வந்துவிட்டால் தங்களுக்கு பிடித்தபடி தான் பிள்ளைகள் திருமணம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் நினைக்கக் கூடாது என்பது என் கருத்து.
இறைவன் அருளால் சிம்புவின் திருமணம் விரைவில் நடக்கும். இது தான் எனக்கு பெரிய மனத்தாங்கலாக உள்ளது. இந்த கேள்வியை மீடியாக்கள் கேட்கும் அளவுக்கு இறைவன் வைத்துவிட்டானே என்று தான் மனத்தாங்கலாக உள்ளது. உங்கள் மீது வருத்தம் இல்லை. இறைவன் மற்றும் விதி மீது தான் வருத்தமாக உள்ளது என்று கூறி கண்கலங்கினார் டி.ராஜேந்தர்.