இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பாண்ட் உலகக்கோப்பை போட்டியில் தேர்வு செய்யாதது குறித்து முதல் முறையாக விளக்கமளித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதில் அனுபவம் வாய்ந்த தமிழக் வீரர் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். இது ஒரு புறம் வரவேற்பை பெற்றிருந்தாலும், ஒரு சிலர் இளம் வீரரான ரிஷ்ப் பாண்டை ஏன் தேர்வு செய்யவில்லை என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்த ரிஷப் பாண்ட் முதல் முறையாக இதைப் பற்றி விளக்கமளித்துள்ளார்.
அதில், நீங்கள் உங்கள் குழந்தைப் பருவத்தில் எதைக் கற்றுக்கொள்கிறீர்களோ அது உங்களுக்குப் பெரும் அளவில் கைகொடுக்கும்.
ஆட்டத்துக்காக நான் பெரும்பாலான இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு பல்வேறு மக்களைச் சந்தித்துள்ளேன். இவைதான் என்னை மனதளவில் உறுதிபெற உதவியது.
அணியில் தேர்வு செய்யப்படாதது பின்னடைவுதான். இது எனக்கு பழக்கப்பட்டதுதான். நீங்கள் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாம் உங்களுக்கு சாதகமா இருக்கும் என்று சொல்ல முடியாது. உங்களுக்குச் சாதகமாக வாழ்க்கை அமையவில்லை என்றால், நீங்கள் உங்களை இன்னும் அதற்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
எப்படி இதை நீங்கள் கடந்து செல்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். என் மீதான விமர்சனைத்தை நேர்மையாக எடுத்துக்கொள்வேன்.
போட்டிகளை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. தொடர்ச்சியான போட்டிகளிலிருந்து நான் இதைக் கற்றுக்கொள்வேன்.
அனுபவத்திலிருந்தும், தவறுகளிலிருந்தும்தான் நீங்கள் கற்றுக்கொள்ள முடியும். ஒரே இரவில் எல்லாம் மாறிவிடாது. எனக்கு வயது இப்போதுதான் 21 ஆகிறது. 30 வயது மனிதரைப்போல யோசிக்க முடியாது. காலம் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.