அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமக்கு அளிக்க முன்வந்த உலக வங்கித் தலைவர் பதவியை மறுத்துவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகளும், வெள்ளை மாளிகை முதுநிலை ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் பெண்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இத்தகவல் குறித்து ஐவரி கோஸ்ட் தலைநகர் அபீஜானில் அவர் கூறியதாவது:
உலக வங்கித் தலைவர் பதவி காலியாக இருந்தபோது, என்னிடம் எனது தந்தை டொனால்ட் டிரம்ப் அந்தப் பதவியை ஏற்பதற்கு விருப்பம் உள்ளதா? என்று கேட்டிருந்தார்.
அதற்கு“ நான் இப்போது வகிக்கும் வெள்ளை மாளிகை முதுநிலை ஆலோசகர் பதவியே முழு திருப்தி அளிப்பதாகவும், வேறு பதவி தேவையில்லை எனவும் நான் மறுத்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
தற்போது உலக வங்கித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டேவிட் மால்பாஸைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழுவில் இவாங்கா டிரம்ப் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments