ஜேர்மனியில் ஜெட் விமானம் ஒன்று தாறுமாறாக ஓடி தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
The Bombardier Global 5000 என்ற ஜெட் விமானம், தலைநகர் பெர்லின் Schonefeld விமான நிலையத்தில் தரையிறங்க இருந்தது. அந்த விமானத்தின் இறக்கைகள் தரையில் மோதியதால், குறித்த விமானம் ஓடுபாதையில் தாறுமாறாக ஓடியது.
இதனால் இந்த தரையிறக்கம் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் விமானத்தில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும், விமானிகள் மற்றும் அதில் இருந்த இதர பணியாளர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.
இயந்திர கோளாறு காரணமாக விமான இறக்கைகள் தரையில் மோதியதாக தெரிகிறது. எனினும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தால் செவ்வாய்க்கிழமை காலை Schonefeld விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் மற்றும் உள்நுழையும் அனைத்து விமானங்களும் இடைநிறுத்தப்பட்டன.
அதிகாரிகள் தரப்பில் இதுகுறித்து கூறுகையில், குறித்த விமானம் பராமரிப்புக்காக இருந்ததாகவும், Cologne செல்லும் வழியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெர்லினுக்கு ஜேர்மனியின் அரசு மற்றும் ராணுவ விமானங்கள் வருவதற்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.