யாகூ நிறுவனத்தை வெரைஸான் தொலைத்தொடர்பு நிறுவனம் வாங்குவதாக அறிவித்திருக்கிறது. 483 கோடி டாலர் கொடுத்து யாகூவை வாங்க உள்ளது வெரைஸான்.
வாஷிங்டன்:

இணையத்தில் தேடுதல், செய்தி, வீடியோ போன்ற தேவைகளுக்கு முன்பெல்லாம் கூகுளை விட யாகூவைத்தான் அதிகமான மக்கள் பயன்படுத்தினார்கள். ஆனால், 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் யாகூவின் செல்வாக்கு சரிய தொடங்கியது. கூகுள், யூ-டியூப், பேஸ்புக் போன்ற புது வரவுகளால் யாகூவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

எனவே கடந்த சில மாதங்களுக்கு முன் யாகூ நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. யாகூவை வாங்க கடந்த சில மாதங்களாக பல நிறுவனங்கள் முயற்சித்து வந்த நிலையில் வெரைஸான் தொலைத்தொடர்பு நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. வெரைஸான் நிறுவனம் 483 கோடி டாலர் கொடுத்து யாகூவை வாங்குகிறது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த இணைப்பு முழுமையடையும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் இணையதளத்தில் ஆதிக்கம் செலுத்தி அசைக்க முடியாத சக்தியாக இருந்த யாகூவின் முடிவு இப்படியாகும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இன்றைய விற்பனை அறிவிப்பை அடுத்து, யாகூவின் சகாப்தம் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் 4,400 கோடி டாலர் கொடுத்து வாங்க முன்வந்தது. ஆனால் யாகூ மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.