திரைப்படங்கள் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டும் இந்திய மக்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக நெட்பிளிக்ஸ் அறிமுகமாகியுள்ளது. மக்களை, திரைப்பட அரங்குகளிலிருந்து விடுவித்து, வீடுகளிலேயே விருப்பப்பட்ட நேரத்தில் பார்க்கும் வசதிக்கு நெட்பிளிக்ஸ் கொண்டு வருகிறது. திரைப்படங்களை திருட்டு வி.சி.டி. பயன்படுத்திப் பார்க்க விரும்பும் நம் மக்களிடம், கட்டணம் வாங்கிக் கொண்டு படங்களைக் காட்டும் நெட்பிளிக்ஸ் எடுபடுமா? இது எதற்கு? இங்கு நம் மக்களிடையே வெற்றி பெறுமா? என்று இங்கு பார்க்கலாம்.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு நெட்பிளிக்ஸ் (Netflix) இயங்குகிறது. விடியோ படங்களைத் தொடர்ந்து காட்டுவதில், உலகில் முதல் சேவை நிறுவனமாக இது இடம் பிடித்துள்ளது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும், இதன் செயல்பாடுகள் மக்களிடையே பிரபலமானதாகும். தொடக்கத்தில், தபால் மூலம் டிவிடிக்களை வழங்கும் நிறுவனமாகத் தொடங்கி, இன்று விடியோ படங்களைத் தானே தயாரித்தும், பழைய படங்களை இணையம் வழி வழங்கும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. 

இந்தியா உட்பட 130 நாடுகளில், புதியதாக இது அறிமுகமாகியுள்ளது. சிங்கப்பூர், ரஷ்யா, தென் கொரியா ஆகிய நாடுகள் சில இந்தப் புதிய நாடுகள் பட்டியலில் உள்ளன. இதன் மூலம், நெட்பிளிக்ஸ், ”உலகத் தொலைக் காட்சி” ஆகச் செயல்படுகிறது. இது உலகளாவிய இணையம் மூலம் சாத்தியமாகியுள்ளது. இந்த வகையில், உலக இணைய சேவையினை நெட்பிளிக்ஸ் தன் வசம் கொள்கிறது. இணையத்தின் 34.7% பங்கினை, நெட்பிளிக்ஸ் பயன்படுத்துகிறது. அடுத்ததாக, யு ட்யூப் 16.88% கொண்டுள்ளது. பேஸ்புக் 2.51%, பிட் டாரண்ட் 4.35% பங்கினைத் தங்கள் வசம் கொண்டுள்ளன. 

இணையம் வர்த்தக ரீதியாக வரும் முன், 1991ல், இணையத் தொடர்பு, கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டோர் மட்டுமே பயன்படுத்தும் ஒரு சாதனமாக இருந்தது. தற்போது விடியோ படங்கள் பார்க்கவே, அதிகம் பயன்படுகிறது. இந்த வகையில் நெட்பிளிக்ஸ் பெரும்பாலான அலைவரிசையைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இது இன்னும் அதிகரிக்க உள்ளது. ஏறத்தாழ 7 கோடி பேர் இதன் வாடிக்கையாளர்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 190 நாடுகளில் இதன் சந்தாதாரர்கள் உள்ளனர் என்பது, இதன் விஸ்தாரமான சேவைக்கு ஓர் அத்தாட்சியாகும். 

இணையம் இன்று பரவலாக மக்களிடையே இடம் பிடித்துவிட்ட நிலையில், குறிப்பாக இந்தியா அந்த வகையில் இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ள சூழ்நிலையில், நுகர்வோருக்கான சுதந்திரத்தை, நாங்கள் அளிக்க விரும்புகிறோம் என நெட்பிளிக்ஸ் துணைத் தலைவர் அறிவித்துள்ளார். புதிய ஆண்டில், மக்கள் தங்கள் வாழ்வின் முக்கிய அங்கமாக இணையத்தையும், 4ஜி இணைப்பினையும் ஏற்றுக் கொள்வார்கள். 4ஜி சேவை அனைத்து நிறுவனங்களாலும், அனைவருக்கும் ஏற்ற திட்டங்களில் தரப்படும். இந்த சூழ்நிலையை நெட்பிளிக்ஸ் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடுகிறது. 

நம் மனதில் பல கேள்விகள் எழலாம். நெட்பிளிக்ஸ் இந்த இணைய வேகப் பரவலை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறது? விடியோ படங்களுக்கு நெட்பிளிக்ஸ் எங்கே செல்லும்? அவை நம் மக்கள் விரும்பும் படங்களாக இருக்குமா? படங்களின் பட்டியல் எங்கே கிடைக்கும்? அரசின் தடை நெட்பிளிக்ஸ் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில்களைப் பார்க்கலாம்.


நெட்பிளிக்ஸ் என்பது என்ன? 



இணையத்தின் அடிப்படையில் இயங்கும் விடியோ பட சேவையை, அனைத்து டிஜிட்டல் சாதனங்கள் வழியாகவும் தரும் சாதனமே நெட்பிளிக்ஸ். நம் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பி.சி., பிளே ஸ்டேஷன் என அனைத்திலும், நெட்பிளிக்ஸ் வழியாக நாம் பெறலாம். நெட்பிளிக்ஸ் திட்டங்களில், நாம் தேர்ந்தெடுக்கும் திட்ட அடிப்படையில், இவற்றில் எந்த சாதனங்கள் வழியாக எல்லாம், நாம் விடியோ படங்களைப் பெறலாம் என்பதை வரையறை செய்து கொள்ளலாம். இதற்கு நமக்குத் தேவைப்படுவது, நிலையான ஓர் இணைய இணைப்பும், நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட்டும் தான். கட்டணம் செலுத்துவதைப் பொறுத்து, ஒரே நேரத்தில் நாம் நான்கு சாதனங்களில் கூட, நெட்பிளிக்ஸ் தரும் விடியோ படங்களைப் பார்த்து ரசிக்கலாம்.

ஏன் பெரிய அளவில் நெட்பிளிக்ஸ் பேசப்படுகிறது? இந்தியா உட்பட, 190 நாடுகளில், நெட்பிளிக்ஸ் சேவை வழங்கப்படுகிறது. இதன் தாயகமான அமெரிக்காவைக் காட்டிலும், மற்ற நாடுகளில் தான் இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடுதலாக விரிய இருக்கிறது. விரைவில், இந்நிறுவனத்தின் வருமானம், மற்ற நாடுகளில் இருந்து ஈட்டுவதுதான் கூடுதலாக இருக்கப் போகிறது.  எனவே, நெட்பிளிக்ஸ் பயன்படுத்துவதன் மூலம், நாம் உலகளாவிய அனுபவத்தினைப் பெற இருக்கிறோம். உலகளாவிய தரமான படங்களைத் தருவதற்கென, நெட்பிளிக்ஸ் பல விருதுகளை ஏற்கனவே பெற்று வருகிறது. 


இந்தியாவில் நெட்பிளிக்ஸ் என்ன தரும்? 


உலகளாவிய அளவில் நெட்பிளிக்ஸ் என்ன தருகிறதோ, அவை அனைத்தும் இந்திய வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். ஏற்கனவே, இந்த நிறுவனம் பெற்ற உரிமங்கள் அடிப்படையில், இந்தியாவிலும் இவை தரப்படும். இந்தியப் படங்கள், அவற்றின் உரிமை பெற்று தரப்படும்.  சிறுவர்கள் பார்க்கக் கூடாத திரைப்படங்கள் அவர்கள் பார்வையிலிருந்து எப்படி தடுக்கப்படும்? நெட்பிளிக்ஸ் பயனாளர் கணக்கினைத் திறக்கும்போதே, அவர்கள் வயது 18 என உறுதி செய்யப்படும். மேலும், சிறுவர்கள் பார்க்க இயலாத வகையில், தனியே தடைப் பூட்டு அமைக்கும் வசதியும், குறிப்பிட்ட வகை படங்களுக்கு வழங்கப்படும்.


நெட்பிளிக்ஸை எப்படிப் பயன்படுத்தலாம்? 


வாடிக்கையாளராக விரும்பினால், Netflix.com/in என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தை அணுகி, உங்களுக்கென ஓர் அக்கவுண்ட்டினை உருவாக்கிக் கொள்ளவும். உங்களுக்கு உகந்த கட்டணத் திட்டம் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். கட்டணம் செலுத்த, உங்களுக்கு கிரெடிட் கார்ட் தேவைப்படும். இந்த திட்டங்கள் மூன்று வகைப்படும், அவை Basic, Standard மற்றும் Premium. முதல் திட்டமான Basic ஒரே ஒரு சாதனத்தில் நெட்பிளிக்ஸ் படங்களைப் பார்க்க அனுமதி தருகிறது. அடுத்த இரண்டு திட்டங்களும், முறையே இரண்டு மற்றும் நான்கு சாதனங்களில் பார்க்க அனுமதி தருகிறது. ஹை டெபனிஷன் மற்றும் அல்ட்ரா ஹை டெபனிஷன் தரங்களில் படங்கள் தரப்படுகின்றன.எவ்வளவு வேகமாகப் படங்கள் உங்கள் சாதனத்தை வந்தடைந்து தொடர்ந்து காட்டப்படும்? இது உங்களின் இணைய இணைப்பு வேகத்தினைப் பொறுத்தது.


எவ்வளவு செலுத்த வேண்டும்?


மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை, திட்டத்திற்கு ஏற்றபடி, ரூ.500, ரூ. 650 மற்றும் ரூ.800 ஆக உள்ளது. முதல் மாதம் நம் பயன்பாட்டிற்கான கட்டணம் ஏதுமில்லை. இலவசமாக நெட்பிளிக்ஸ் படங்கள் கிடைக்கும். இந்த இலவச மாதப் பயன்பாடு முடியும் முன்னர், நீங்கள் செலுத்த வேண்டிய பணம் குறித்து மூன்று நாட்களுக்கு முன்பாக, மின் அஞ்சல் அனுப்பப்படும். எந்த நேரத்திலும், நம் சந்தா தொடர்பினை ரத்து செய்திடலாம். திட்டத்தை மாற்றிக் கொள்ளலாம்.

இந்தியாவில் இந்த திட்டம் வெற்றி பெறுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதனைப் பயன்படுத்த, இணைய இணைப்பு ஒழுங்கான வேகத்தில் இருக்க வேண்டும். விநாடிக்கு 3 மெகா பிட்ஸ் வேகமும், ஹை டெபனிஷன் படம் பார்க்க, விநாடிக்கு 5 மெகா பிட்ஸ் வேகமும் கொண்ட இணைய இணைப்பு தேவைப்படும். எனவே, நெட்பிளிக்ஸ் பயன்படுத்த பலர் தங்கள் இணைய இணைப்பினை, கூடுதல் வேகத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டியதிருக்கும். பழைய ரெளட்டர்களுக்குப் பதிலாக, அதி வேக இணையத்திற்கு ஈடு கொடுக்கும் ரெளட்டர்களுக்கு மாறிக் கொள்ள வேண்டியதிருக்கும். மேலும், இங்கு இணையப் பயன்பாடு, ஸ்மார்ட் போன்கள் வழியாகவே பெரும்பாலானவர்களால் மேற்கொள்ளப்படுவதால், நெட்பிளிக்ஸ் சேவையினையும் ஸ்மார்ட் போனிலேயே பயன்படுத்த மக்கள் விருப்பப்படலாம். அப்போது, மொபைல் இணைய சேவைக்கும் அதிக பணம் செலுத்த வேண்டியதிருக்கும். திரைப்படம் மற்றும் டி.வி. நாடகங்கள், நிகழ்ச்சிகளைப் பார்க்க, ஒரு மணி நேரத்தில் ஒரு கிகா பைட் டேட்டா செலவாகும். அதன்படி பார்க்கையில், தற்போது செலுத்தப்படும் பணத்தைக் காட்டிலும், கூடுதலாக 30% செலுத்த வேண்டியதிருக்கும்.

மலிவான கட்டணத்தில் அதிக வசதியை நாடும் இந்தியர்களிடையே இது எடுபடுமா? என்றே நெட்பிளிக்ஸ் திட்டத்தினை எடை போடுபவர்கள் கேட்கின்றனர். மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் திருட்டு வி.சி.டி. சந்தை உள்ள இந்தியாவில், அதிகக் கட்டணம் செலுத்தி, நெட்பிளிக்ஸ் மூலம் திரைப்படம் பார்க்க மக்கள் விரும்புவார்களா? இந்தியாவைப் பொறுத்த வரை, திருட்டு வி.சி.டி. சந்தை ஈட்டும் லாபம், திரைப்படங்கள் தயாரிப்பு லாபத்தின் அளவிற்கு இணையாக இருந்து வருகிறது. ஒருவேளை, நெட்பிளிக்ஸ் இந்த திருட்டு வி.சி.டி. பழக்கத்தை மக்களிடையே மாற்றலாம்.

உலகளாவிய திரைப்படங்களைப் பார்க்கும் பழக்கம் நம் மக்களிடம் உள்ளதா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் போகப் போகத்தான் தெரிய வரும். மேலும், நெட்பிளிக்ஸ் தற்போது இணைய இணைப்பினைத் தரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, தன் சேவையைப் பயன்படுத்தும் நேரத்தினைத் தன் திட்டத்துடன் இணைத்து செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். சீனாவில் இன்னும் நெட்பிளிக்ஸ் தன் வர்த்தகத்தினைத் தொடங்கவில்லை. அரசியல் ரீதியாகத் தன் நிர்வாகக் கட்டமைப்பினை எதிர்க்கும் தகவல்களைச் சீன அரசு கட்டுப்படுத்துகிறது. எனவே, நெட்பிளிக்ஸ் சேவைக்குத் தடை விதிக்கவே சீனா விரும்பும். ஆனால், நெட்பிளிக்ஸ் இதற்கான இடைப்பட்ட ஒரு வழியைக் கண்டறிந்து, சீன அரசிடம் அனுமதி பெற்றுவிடும் என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சீனா போல, கிரீமியா, வட கொரியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலும் நெட்பிளிக்ஸ் சேவை இல்லை. இதற்குக் காரணம், அமெரிக்க அரசின் தடை சட்டங்களாகும்.

ஆங்கிலம் உட்பட உலகின் 17 மொழிகளில் நெட்பிளிக்ஸ் சேவை தருகிறது. இந்திய மொழிகளில் இதன் சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கலாம். இந்தியப் படங்கள் கிடைக்கின்றனவா? ஆம், தற்போதைக்கு 80 இந்தியப் படங்கள் பட்டியலில் உள்ளன. இந்திய டி.வி.நிகழ்ச்சிகளும் உள்ளன. இவை பெரும்பாலும், வட இந்திய மாநிலங்களில் தயாரிக்கப்பட்ட படங்களே. தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை, மணி ரத்னம் படமான ''ஓ.கே. கண்மணி'' உள்ளது. பரவலாக அனைத்து மாநில மொழிப் படங்கள் இல்லாமல், நெட்பிளிக்ஸ் வெற்றி பெறுவது சிரமமே. இதனை நிச்சயம் நெட்பிளிக்ஸ் நிறுவனம் உணர்ந்திருக்கும்.



நெட்பிளிக்ஸ் போன்று மாற்றுத் திட்டங்கள் உள்ளனவா?

விடியோ ஸ்ட்ரீமிங் தரும் மற்ற சேவைகள் Hotstar, Spuul, BigFlix, Hooq மற்றும் BoxTV எனப் பல உள்ளன. ஆனால், இவை எதுவும், நெட்பிளிக்ஸ் போன்ற தரமான காட்சியுடன் கூடிய படங்களைத் தருவதில்லை. என்ன, மாதம் ரூ. 500 செலுத்தி, விருப்பப்பட்ட படங்களை நினைத்த நேரத்தில் பார்க்கலாமா?