மேஜைக் கணினி, மடிக் கணினி மற்றும் குறுங்கணினிஅனைத்துமே, பயன்பாட்டினைப் பொறுத்த வரை முக்கியமானது தான். அதிகச் சிறப்பு வாய்ந்தது என்றால், அது பயன்படுத்துபவரின் தேவைகளின் அடிப்படையிலேயே அமையும். இன்னும் சற்று விரிவாக இவற்றின் பயன்களை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.


1. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் எனப்படும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் அல்லது மேக் கம்ப்யூட்டர்கள் இன்னும் வர்த்தக அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அதிக அளவில் விடியோ மற்றும் கிராபிக்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய சாதனமாகவே கருதப்படுகின்றன. இதில் நாம் விரும்பும் அளவிற்கு, கம்ப்யூட்டிங் மற்றும் கிராபிக்ஸ் திறனை உயர்த்திக் கொள்ளலாம். மிகப் பெரிய அளவிலான மானிட்டர்களை இணைத்துக் கொண்டு செயல்படுத்தலாம். ஒன்று என்ன, இரண்டு மானிட்டர்களைக் கூட இணைத்து, இரு வழிகளில் பயன்படுத்தலாம். மிக முக்கியமான புரோகிராம்களை வடிவமைக்க, இன்னும் இந்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள் அடிப்படைத் தேவையாய் உள்ளன.



2. லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வீடுகளிலும், வர்த்தக அலுவலகங்களிலும் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வகைக் கம்ப்யூட்டர்களிலும், நமக்குத் தேவையான திறனை, அதிகப்படுத்திப் பயன்படுத்தலாம். இவை எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் வசதியை அளிக்கின்றன. இதனைப் பயன்படுத்துபவர்கள், பல வேளைகளில், பெரிய அளவிலான கீ போர்ட்களின் தேவையை உணர்கின்றனர். இந்தத் தேவையை, பெரிய கீ போர்ட்களை, இதனுடன் இணைத்துப் பயன்படுத்துவதன் மூலம் நாம் நிறைவேற்ற முடியும். லேப்டாப் மற்றும் டேப்ளட் என ஒப்பிடுகையில், சில புரோகிராம்களை லேப்டாப் கம்ப்யூட்டரில் செயல்படுத்துவோம்; அந்த புரோகிராமின் டேப்ளட் பதிப்பை, டேப்ளட் கம்ப்யூட்டரில் பயன்படுத்துவோம். ஆனாலும் அந்த புரோகிராமின் சில செயல்பாடுகளை, லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் மட்டுமே செயல்படுத்த முடியும். டேப்ளட் பி.சி.க்களில், இணையத்தில் இணைத்து மட்டுமே பயன்படுத்தும் சில செயல்பாடுகளை, பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில், இணைய இணைப்பு இல்லாமலேயே செயல்படுத்த முடியும்.


3. கடந்த சில ஆண்டுகளில், பிரபலமாகி வரும் டேப்ளட் பி.சி.க்களின் பயன்பாடு, நம் பெர்சனல் கம்ப்யூட்டிங் அமைப்பினையே பல பரிமாணங்களில் மாற்றிவிட்டன. சிறுவர்கள் முதல் தாத்தா பாட்டிகள் வரை, தூக்கிச் சென்று பயன்படுத்த முடியும் அளவிற்கு இந்த சிறிய பெர்சனல் கம்ப்யூட்டர் மாறிவிட்டது. வீடுகளில் பயன்படுத்தும் பலருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, டேப்ளட் பி.சி.க்கள் மிகவும் முக்கியமானவையாக அமைந்து விட்டன. பல பள்ளிகளில், டேப்ளட் பி.சி.க்களை, பள்ளி நிர்வாகமே, மாணவர்களுக்கு வீடுகளில் 'ஹோம் ஒர்க்' செய்திட கட்டாய சாதனமாக வழங்குகிறது. ஏனென்றால், மாணவர்களுக்கான நூல்கள், மின் நூல்களாக (e Book) மிக அதிக எண்ணிக்கையில் இதில் பதிந்து வைத்துப் பயன்படுத்த முடியும்.


சமூக இணைய தளங்கள் வழியாக, நட்பையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்வதற்கு, இவை மிக முக்கிய சாதனங்களாகக் கருதப்படுகின்றன. நாம் வேலை பார்க்கும் இடங்களில், பெர்சனல் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கு ஈடாக இவற்றைப் பயன்படுத்துவது முழுமையாக இயலாது. ஆனால், தற்போது சில நிறுவனங்கள், இதனையே இலக்காகக் கொண்டு, டேப்ளட் பி.சி.க்களை வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இப்போதே, சில உணவு விடுதிகளில், டேப்ளட் பி.சி.க்களைப் பயன்படுத்தி, உணவு வழங்கும் ஊழியர்கள், நமக்குத் தேவையான உணவுப் பட்டியலை எடுத்து, உணவுக் கூடத்திற்கு அனுப்புவதனைப் நாம் காண முடிகிறது. பல அலுவலகங்களில், அலுவலர்கள் தங்கள் பிரிவு ஊழியர்களுக்கு, பணி குறித்த குறிப்புகளை அனுப்பவும் டேப்ளட் பி.சி.க்களைப் பயன்படுத்துகின்றனர்.


இந்த வகையில் நாம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் சாதனத்தின் பயன்பாடு குறித்துக் கவனிக்க வேண்டும். டேப்ளட் பி.சி. பயன்பாட்டில், ஒரு பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியது ஆப்பிள் நிறுவத்தின் ஐ பேட் சாதனம் தான். விலை மிக அதிகமாக இருந்தாலும், இதன் பயன்பாடு தான், விலை குறைந்த ஆண்ட்ராய்ட் டேப்ளட் பி.சி.க்களை சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இந்த டேப்ளட் பி.சி.க்களுடன், நான் ஸ்மார்ட் போன்களையும் இணைத்துப் பார்க்க விரும்புகிறேன். ஏனென்றால், உண்மையிலேயே அவை சிறிய டேப்ளட் பி.சி.க்களாகத்தான் செயல்படுகின்றன. 4ஜி வழியாக இணைக்கப்படுகையில், அவை சில டேப்ளட் பி.சி.க்களையும் தங்கள் திறன் மிக்க செயல்பாட்டில் மிஞ்சுகின்றன. நான் என்னுடைய ஸ்மார்ட் போனை, அழைப்புகளை ஏற்படுத்த, டெக்ஸ்ட் அமைக்க, பேஸ்புக் பயன்படுத்த, இணையத்தில் உலா வந்து தகவல்களைத் தேடிப் பெற, போட்டோக்களை எடுத்து அவற்றை எடிட் செய்திட, டாகுமெண்ட்களை உருவாக்கி அவற்றையும் மேம்படுத்திட பயன்படுத்தி வருகிறேன். இவை, இப்போது வீடுகளிலும், சிறிய அளவிலான வர்த்தக அலுவலகங்களிலும் மிக முக்கிய கம்ப்யூட்டிங் சாதனங்களாகக் கருதப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


இந்த சாதனங்களின் முக்கியத்துவம் அல்லது சிறப்புத் தன்மை இவற்றைப் பயன்படுத்துவோரின் தேவைகளின் அடிப்படையிலேயே அமைகிறது. பல வேளைகளில், தங்களுடைய ஸ்மார்ட் போன் தங்களிடமிருந்து பிரிக்கப்படுகையில், பலர் ஏதோ பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது போல உணர்கின்றனர். இருந்தாலும், சில வேலைகளை, நான் என் பெர்சனல் கம்ப்யூட்டரில் தான் மேற்கொள்ள முடியும். எதிர்காலத்தில், இந்த வேறுபாடுகள் தீர்க்கப்படும் வகையில் அனைத்தும் ஒரே திறன் கொண்டதாக வடிவமைக்கப்படலாம். எடுத்துச் சென்று பயன்படுத்தப்படும் சாதனங்களில், மேஜைக் கணினியில் மேற்கொள்ளக் கூடிய அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் திறன் அதிகப்படுத்தப்படலாம். அப்போது, இவற்றின் இடையே உள்ள இந்த திறன் வேறுபாடு மறையும்.


மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, போன்கள், டேப்ளட் பி.சி.க்கள் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் என அனைத்து சாதனங்களிலும் இயங்கும் வகையில் வடிவமைத்ததன் நோக்கம் மேலே சொல்லப்பட்ட ஒருங்கிணைக்கும் நோக்கம்தான்.


தற்போது, கம்ப்யூட்டிங் பணிகள் க்ளவ்ட் சூழ்நிலையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. நம் தகவல்களும் புரோகிராம்களும், க்ளவ்ட் சர்வர்களில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். அவற்றை நம் ஸ்மார்ட் போன், டேப்ளட் பி.சி., லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் டெர்மினல் என எதன் வழியாகவும் பெற்று பயன்படுத்த முடியும். இது ஒரே சாதனத்தை நாம் சார்ந்திருக்கும் தன்மையை நீக்கி, நமக்கு எங்கும் சென்று பயன்படுத்தக் கூடிய வசதியை அளிக்கும். அதனை எண்ணிப் பார்க்கையில், அனைத்து சாதனங்களும் நமக்கு முக்கியமானவையே. கூடுதல் சிறப்புகளைக் கொண்டவையே.